94 போட்டிகளாக அதிகரிப்பு: பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் வாய்ப்பு

புதுடில்லி: பிரிமியர் லீக் தொடருக்கான போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2008 முதல் பிரிமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற முதலிரண்டு சீசனில் (2008-2009) தலா 59 போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 2010ல் (8 அணிகள்) 60 போட்டிகள் நடத்தப்பட்டன. அடுத்த சீசனில் (2011) கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 74 போட்டிகள் நடந்தன. அடுத்த இரு சீசனில் (2012-2013) 9 அணிகள் பங்கேற்றன. இதில் தலா 76 போட்டிகள் நடந்தன. பின், 2014 முதல் 2021 வரை 8 அணிகளுக்கு இடையில் தலா 60 போட்டிகள் நடந்தன.
கடந்த 2022 முதல் 10 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் 74 போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. வரும் 2028 சீசன் முதல், 94 போட்டிகளாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாக அணிகள் சேர்க்கப்படமாட்டாது. பத்து அணிகள் மட்டுமே பங்கேற்கும். ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். ஒரு அணி 18 லீக் போட்டிகளில் விளையாடும். இதன்படி 90 லீக், 4 'பிளே-ஆப்' என, மொத்தம் 94 போட்டிகள் நடத்தப்படும்.


பிரிமியர் லீக் சேர்மன் அருண் துமால் கூறுகையில், ''பிரிமியர் லீக் தொடருக்கான போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement