மத்திய குற்றப்பிரிவு வாயிலாக 15 மாதங்களில் 747 பேர் கைது

சென்னை,சென்னை மத்திய குற்றப்பிரிவு வாயிலாக, 15 மாதங்களில், 747 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னை மத்திய குற்றப்பிரிவில், 2024 ஜன., முதல் ஏப்., 2025 வரை, 1,005 வழக்குகள் பதிவானது. அதில், 948 வழக்குகள் விசாரணை முடிந்து, 747 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; 88 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த குற்றவாளிகளுக்கு எதிரான, 707 வாரண்ட் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய குற்ற வழக்குகள்



 போலி பாஸ்போர்ட் வழக்கில் முக்கிய குற்றவாளியான தேவகோட்டை மெட்ரோ ஸ்டுடியோ உரிமையாளர் சதீஷ்குமாரும், அவர்களது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்

 போலி ஆவணங்கள் வாயிலாக கோவில் நிலத்தை விற்று சென்னை வாசியை ஏமாற்றிய, ஜெயஸ்ரீ, நந்தகிஷோர், கீதா, அபி ஷேக் கிருஷ்ணா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

 அமெரிக்க துாதரக புகார் அடிப்படையில், அமெரிக்க குடிமகன் ஒருவரை இணையவழியில் பின் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்த, ஜேசுபாலன் என்பவர் கைது செய்யப்பட்டார்

 மத்திய குற்றப்பிரிவின் இணைய குற்றப்பிரிவு, பெரிய அளவிலான டிஜிட்டல் கைது மோசடியை முறியடித்தது.

இந்த மோசடி நாடு முழுதும் செயல்பட்டு வருவதும், இந்த கும்பல் சீன தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக, அசாம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு,கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

Advertisement