திருப்போரூர் வட்ட வழங்கல் ஆபீசை தரை தளத்திற்கு மாற்ற வேண்டுகோள்

திருப்போரூர், திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், பையனுார், மானாமதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் ஆகிய ஆறு குறுவட்டங்களில், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக, திருப்போரூர் தாலுகா அலுவலகம் வருகின்றனர்.

இந்த தாலுகா அலுவலகத்தில் தரை தளத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு, ஆதார், இ- - சேவை மையம் ஆகியவை உள்ளன.

முதல் தளத்தில் தாசில்தார் அறை, நில அளவை பிரிவு உள்ளிட்டவை உள்ளன.

இரண்டாம் தளத்தில் வட்ட வழங்கல் பிரிவு, பதிவறை, தேர்தல் பிரிவு உள்ளிட்டவை உள்ளன.

இந்நிலையில், இரண்டாம் தளத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் மனு மீது விசாரணை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் குறித்த விசாரணை, நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்தல் போன்ற, குடும்ப அட்டை சம்பந்தமான பணிகளை, வட்ட வழங்கல் அலுவலர் மேற்கொள்கிறார்.

இப்பணிகள் தொடர்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் இங்கு வருகின்றனர்.

வட்ட வழங்கல் பிரிவு இரண்டாம் தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறி இறங்க சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், இரண்டாம் தளத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவை, தரை தளத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement