ரூ. 1.48 லட்சத்தை ஒப்படைத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை, ஏப். 29-

சாலையில் கேட்பாரற்று கிடந்த 1.48 லட்சம் ரூபாயை மீட்டு, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த, போக்குவரத்து பெண் காவலருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மாம்பலம் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர், இந்திராணி, 38.

அவர் நேற்று முன்தினம் இரவு, தியாகராயநகர் மேட்லி சாலை - பர்கிட் சாலை சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை பார்த்தார். அதில், 1.48 லட்சம் ரூபாய் இருந்தது. அதை, மாம்பலம் சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். பெண் காவலர் இந்திராணியின் நேர்மையை, போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

பின் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வாகன எண்ணை வைத்து, பணத்திற்கான உரிமையாளரை போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement