5 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப்புலி

போபால்: நம் நாட்டில், 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்த சிவிங்கிப்புலிகளை, மீண்டும் வளர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட மத்திய அரசு, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தென்னாப்ரிக்கா மற்றும் நமீபியா நாடுகளில் இருந்து, 20 சிவிங்கிப்புலிகளை வரவழைத்தது.
சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.
அவற்றில் சில நோய்வாய்ப்பட்டு இறந்தன. சில சிவிங்கிப்புலிகளுக்கு பிறந்த குட்டிகளும் உடனுக்குடன் இறந்தன. நம் நாட்டில் பிறந்த குட்டிகள் உட்பட 26 சிவிங்கிப்புலிகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இம்மாத துவக்கத்தில் இரண்டு சிவிங்கி புலிகள் காந்தி சாகர் சரணாலயத்துக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், குனோ தேசிய பூங்காவில் இருந்த நிர்வா என பெயரிடப்பட்ட சிவிங்கிப்புலி, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.
தாய் மற்றும் குட்டி சிவிங்கிப்புலிகளை குனோ தேசிய பூங்கா மருத்துவர்கள், 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவை அனைத்தும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.