'ரா'வாக 5 பாட்டில் 'சரக்கு' பந்தயத்துக்காக குடித்தவர் பலி

கோலார்: நண்பர்களுடன் பந்தயம் கட்டி, தண்ணீர் சேர்க்காமல் ஐந்து பாட்டில் மது அருந்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் பூஜாரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் கார்த்திக், 21. இவருக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஒன்பது நாட்களுக்கு முன், அவருக்கு குழந்தை பிறந்தது.
கார்த்திக் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் மாலை, நண்பர்கள் வெங்கடரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட சிலருடன் மது அருந்தினார்.
அப்போது வெங்கடரெட்டி, 'மதுவில் ஒரு சொட்டு தண்ணீர் கலக்காமல் ஐந்து பாட்டில் மது அருந்தினால், 10,000 ரூபாய் கொடுப்பேன்' என, கார்த்திக்கிடம் சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கார்த்திக், 'மது அருந்துவதில் நான் என்றும் தோற்றது இல்லை' என்றார். இதன்படி, ஒரு சொட்டு தண்ணீர்கூட கலக்காமல், ஐந்து பாட்டில் மதுவை அருந்தி, சவாலில் வெற்றி பெற்றார். அதே நேரம், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. இதை உணர்ந்த கார்த்திக், 'நான் பிழைக்க மாட்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, என் உயிரை காப்பாற்றுங்கள்' என மன்றாடினார்.
நண்பர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். கார்த்திக்கிடம் பந்தயம் கட்டிய வெங்கடரெட்டி, சுப்ரமணி உட்பட ஆறு பேர் மீது கார்த்திக்கின் குடும்பத்தினர் புகார் செய்தனர். வெங்கடரெட்டி, சுப்ரமணியை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்ற நால்வரை தேடி வருகின்றனர்.
