26 பேர் உயிரிழந்ததை காரணம் காட்டி மாநில அந்தஸ்து கோர மாட்டேன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் உருக்கம்

ஜம்மு : ''பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்ததை காரணம் காட்டி ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை கோர மாட்டேன்,'' என, முதல்வர் ஒமர் அப்துல்லா சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370, கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

ஜம்மு - காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்றார்.

அப்போது முதலே, ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று பேசியதாவது:

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியவில்லை. சுற்றுலா பயணியரை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டியது என் பொறுப்பு. அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

பஹல்காம் தாக்குதலுக்கு பின், எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை திரும்ப கோருவது? என் அரசியல் அவ்வளவு தரம் தாழ்ந்தது இல்லை.

மாநில அந்தஸ்து குறித்து கடந்த காலங்களில் பேசியுள்ளோம்; எதிர்காலத்திலும் பேசுவோம். ஆனால், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டதை காரணம் காட்டி, 'எங்களுக்கு மாநில அந்தஸ்தை வழங்குங்கள்' என, கோரினால் அதைவிட வெட்கக்கேடான செயல் வேறு எதுவும் இல்லை.

மக்கள் ஆதரவு இருந்தால் பயங்கரவாதத்தை ஒழித்துவிட முடியும். அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. எதாவது சொல்லி அந்த வேகத்தை நாம் குலைத்துவிட கூடாது.

துப்பாக்கியால், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தான் முடியும்; மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எல்லையில் 4வது நாளாக

அத்துமீறிய பாக்., ராணுவம்ஜம்மு - காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் கடந்த 24ம் தேதி இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு நம் வீரர்கள் பதிலடி தந்தனர். இதை தொடர்ந்து, 25 - 26, 26 - 27 நள்ளிரவிலும் பாக்., ராணுவம் தாக்குதலை தொடர்ந்தது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லையில், 27 - 28 நள்ளிரவில் பாக்., ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நான்காவது நாளாக பாக்., ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு நம் வீரர்கள் பதிலடி தந்தனர். இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

Advertisement