இந்தியாவை விட அரை நுாற்றாண்டு பின்தங்கிய நாடு பாகிஸ்தான்: அசாதுதீன் ஓவைசி மீண்டும் விளாசல்

ஹைதராபாத்: “இந்தியாவை விட, பாகிஸ்தான் அரை நுாற்றாண்டு பின்தங்கி உள்ளது. அந்நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டை கூட நெருங்கவில்லை,” என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., - எம்.பி., அசாதுதீன் ஓவைசி தெரிவித்து உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக, மஹாராஷ்டிராவின் பிரபானி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நமக்கும், பாகிஸ்தானுக்கும் அரை மணி நேரம் வித்தியாசம் உள்ளது. அவர்கள் அரை மணி நேரம் பின்தங்கி உள்ளனர். நேரத்தில் மட்டுமல்ல, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் நீங்கள் அரை நுாற்றாண்டு பின்தங்கி உள்ளீர்கள்.
உங்கள் நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட, எங்களின் ராணுவ பட்ஜெட் அதிகம். எங்களிடம் அணுகுண்டுகள் உள்ளன என, பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டி வருகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அப்பாவி மக்களை நீங்கள் கொன்று குவித்தால், எந்த நாடும் அமைதியாக இருக்காது.
எந்த மதத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? மதத்திற்காக கொடூர வன்முறையில் ஈடுபட்ட பழங்கால முஸ்லிம் சமூகமான கவாரிஜ்களை விட நீங்கள் கொடூரமானவர்கள். இந்த செயலால் நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின் வாரிசுகள் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
இந்தியாவுக்கு எதிராக செயல்பட பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது. அந்நாட்டை பொருளாதார ரீதியில் பலவீனமாக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில, 'டிவி' செய்தி தொகுப்பாளர்கள் காஷ்மீரிகளுக்கு எதிராக பேசி வருகின்றனர். அவர்கள் வெட்கம் கெட்டவர்கள். காஷ்மீர் எப்படி இந்தியாவுக்கு சொந்தமோ, அதேபோல காஷ்மீரிகளும் இந்தியாவுக்கு சொந்தமானவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சிந்து நதி நமதே; அதன் நீரை நிறுத்தினால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக பாயும்' என, பாக்., முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ சமீபத்தில் பேசினார். இதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி தந்துள்ளார். அவர் கூறியதாவது:இது ஒரு குழந்தைத்தனமான பேச்சு. பிலாவல் புட்டோவின் தாயும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோவுக்கும், அவரது தாத்தாவும், முன்னாள் அதிபருமான ஜுல்பிகர் அலி புட்டோவுக்கும் என்ன நடந்தது என்பதை பிலாவல் மறந்துவிட்டாரா? பெனாசிரை படுகொலை செய்தது பயங்கரவாதிகள்.உங்கள் தாயை கொலை செய்தால் அது பயங்கரவாதம்; எங்கள் மக்களை கொன்று குவித்தால் அது பயங்கரவாதம் அல்ல. அதுதானே உங்கள் எண்ணம்.இவ்வாறு அவர் கூறினார்.
