ஜாதி மறுப்பு திருமணம் செய்த வாலிபரின் கொலை வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்ற மனு

சென்னை, பள்ளிக்கரணையில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீன், மாற்று ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதை விரும்பாத, அந்த பெண்ணின் சகோதரர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பிரவீனை கொலை செய்தனர். கணவரை இழந்த ஷர்மிளா, இரண்டு மாதங்கள் கழித்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரவீனை கொலை செய்த வழக்கில், ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை, பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர். தற்போது, இவர்கள் ஜாமினில் உள்ளனர். இவ்வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரவீனின் தந்தை கோபி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், 'வழக்கில் சாட்சிகள் மிரட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையில் சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணை நியாயமாக இல்லை. எனவே, போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சி.பி.ஐ., விசாரிக்க கோரிய மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Advertisement