வெங்கச்சேரியில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சியில், வெங்கச்சேரி, கடம்பர்கோவில், ஆதவப்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, வெங்கச்சேரியில் உள்ள திருமுக்கூடல் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வெங்கச்சேரி நீரேற்றும் நிலையம் அருகே உள்ள, சாலையோரத்தில், மூன்று மாதமாக குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

அவ்வாறு வெளியேறும் குடிநீரானது சாலையோரத்திலே தேங்கி பாசி படர்ந்து வருகிறது. மேலும், தேங்கும் குடிநீரில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது, கோடைக்காலம் துவங்கி உள்ளதால், பொதுமக்களுக்கு குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement