மத சின்னங்களை அகற்ற வேண்டாம் எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே

1

மங்களூரு: பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ரயில்வே தேர்வு எழுதுவோரின் மத அடையாள சின்னங்களை அகற்ற வேண்டிய தேவையில்லை' என, ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ரயில்வே தேர்வில் பங்கேற்றோர் அணிந்திருந்த தாலிக்கயிறு, பூணுால் போன்றவற்றை அகற்ற வேண்டும் என, தேர்வு அதிகாரிகள் கோரினர்.

இதற்காக, ரயில்வே துறை அளித்திருந்த ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதில், மத அடையாள சின்னங்களை அகற்ற வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.

ரயில்வே துறையின் அந்த செயலுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக வாபஸ் பெறப்படா விட்டால், நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தன. அதையடுத்து, அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே இணை அமைச்சர், வி.சோமண்ணா நேற்று நிருபர்களிடம் கூறும் போது, ''ரயில்வே தேர்வு எழுத வருவோரிடம் தாலிக்கயிறு, பூணுால் போன்றவற்றை அகற்றும்படி உத்தரவிடப்பட்டது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

''இனிமேல் அவ்வாறு எந்த தேர்வு அதிகாரிகளும் கேட்க மாட்டார்கள். அதற்கேற்ப, ஹால் டிக்கெட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. மேலும், எந்த மத அடையாளங்களையும் அகற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

ரயில்வே துறை சார்பில் நர்சிங் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கான தேர்வுகள் இன்று நடக்க உள்ளன. அதில், மத்திய அரசின் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement