எல்லையம்மன் கோவிலில் சித்திரை விழா கோலாகலம்
வாலாஜாபாத்,வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இக்கிராமத்தில், தேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு நேரங்களில் பல்வேறு அவதாரங்களில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
இறுதி நாளான, நேற்று முன்தினம், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது, அம்மனுக்கு புடவை சாத்துதல், பொங்கல் வைத்தல், முடி காணிக்கை செலுத்துதல், வேப்பஞ்சேலை கட்டி கோவிலை வலம் வருதல் மற்றும் ஆடு, மாடுகளை அம்மனுக்கு நேர்ந்தும், பலி கொடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
இரவு 8:00 மணிக்கு, கோவில் வளாக குளத்தில் தெப்ப உத்சவம் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய எல்லையம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார்.