கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த கோரி கலெக்டரிடம் மனு


கரூர்:
டாஸ்மாக் மதுக்கடையை போல், கல் குவாரிகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் அனுமதி பெற்ற, 2,000 குவாரிகளும், அனுமதி பெறாமல், 6,000க்கும் மேற்பட்ட குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பாக கல்லை வெட்டி எடுத்து வருகின்றனர். விதிமுறைக்கு புறம்பாக வெட்டப்பட்ட கல்குவாரி மீது, பல மடங்கு அபராதம் விதிக்க வேண்டும். இப்பகுதிகளில். 'சிசிடிவி' பொருத்தி அரசு கண்காணிக்க வேண்டும். டிஜிட்டல் சர்வே எடுக்கப்படும் என அரசு அறிவித்தபோது, கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

தற்போது, கன மீட்டருக்கு பதிலாக, டன் அடிப்படையில் வரி விதிப்பதற்கு குவாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். மேலும், கனமீட்டரில் நிர்ணயிக்கும்போது, நடைச்சீட்டு கையால் எழுதி மோசடி நடக்கிறது.

எடை அடிப்படையில், கம்ப்யூட்டர் பில் தயாரிக்கும்போது சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு இல்லை. தமிழக அரசு புதிய நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 200வது வாக்குறுதியாக, அரியவகை கனிமங்களை அரசே ஏற்று நடத்தும் என தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடையை போல், கல் குவாரிகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். எம்.சாண்ட், ஆற்று மணலுக்கு பதிலாக மாதம், 15 லட்சம் டன் ஆற்று மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement