அரசு கொள்முதல் நிலையத்தில் எடை போட தாமதம் சாலையோரம் நெல்லை கொட்டும் அவலம்


டி.என்.பாளையம்:-
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில், தற்போது நெல் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய, அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு உட்பட்ட, பங்களாபுதுார் அருகேயுள்ள ந.புளியம்பட்டி கொள்முதல் நிலையத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளது. இதனால் எடை போடுவது மற்றும் லோடு அனுப்புவதில் தாமதமாகிறது.
மேலும் கொண்டு வரும் நெல்லை கொட்ட இடமின்றி, கோபி-பங்களாப்புதுார் சாலையை ஒட்டி, விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அறுவடை வேகமாக நடந்து வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை எடை போடமலும், எடை போட்ட நெல்லை குடோன்களுக்கு அனுப்பாமலும் உள்ளனர். இதனால் நிலையத்துக்கு கொண்டு வரும் நெல்லை கொட்ட இடமின்றி தவிக்கிறோம்.
இதனிடையே கனமழை பெய்தால் நெல் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் நெல்லை எடை போட்டு, குடோன்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement