மே 4க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கு நோட்டீஸ்


ஈரோடு:
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள, அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் கொடி கம்பங்களை, ஏப்.,20க்குள் அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கம்பங்களை அகற்றி கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே, 4க்குள் கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள், 396, மதம் சார்ந்த கம்பங்கள், 12, ஜாதி சார்ந்து, 2, பிற, 7, பில்லருடன் வைக்கப்பட்டுள்ள கம்பங்கள், 40, என, 457 கொடி கம்பங்கள் உள்ளன. இந்நிலையில் மே, 4க்குள் கம்பங்களை அகற்ற வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
மே, 4ம் தேதி நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்படும். மே, 5ம் தேதி காலை, அகற்றப்படாத கொடி கம்பங்கள் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்ய வேண்டுகோள்
அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற கோரும் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, ரோடு கலெக்டரிடம், மா.கம்யூ., ஈரோடு மாவட்ட செயலாளர் ரகுராமன் நேற்று மனு வழங்கினார்.
அதில், 'உயர் நீதிமன்ற தீர்ப்பு மேல்முறையீடு செய்து, சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். மனுக்களை ஏற்ற நீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும், என தெரிவித்துள்ளது. எனவே விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு வரும் வரை, கொடி கம்பங்களை அகற்றும் அறிவிப்புக்களை ரத்து செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement