'பங்கர்' குழியில் பதுங்கினாரா பாக்., ராணுவ தளபதி சையது அசிம் முனீர்

8

கார்கில் போருக்கு சூத்திரதாரி பர்வேஸ் முஷாரப். அப்போதைய, பாக்., ராணுவ தளபதி. நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க அடித்தளம் போட்ட முஷாரப், உள்நாட்டில் தனக்கு ஆதரவாக படையையும், மக்களையும் திரட்ட இந்தியாவுக்கு எதிராக போருக்கு ஆயத்தமானார். ஆனால், இந்தியாவை, அவரால் வெல்ல முடியவில்லை. எனினும், நவாஸ் ஷெரீப்பை ஆட்சியில் இருந்து துாக்கி எறிந்தார்.

அந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானில் மக்கள் உணர்வை துாண்டி, ஆட்சிக்கு குறி வைக்கிறார், தற்போதைய ராணுவ தளபதி சையது அசிம் முனீர்.

அன்று அண்ணன் நவாஸ் ஷெரீப், முஷாரப்பிடம் ஆட்சியை பறி கொடுத்தது போல், இன்று தம்பி ஷாபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரிடம் மண்டியிடுவாரா என்பது, இன்னும் சில மாதங்களில் தெரியவரும். காரணம், இன்னொரு ராணுவ ஆட்சிக்குத் தான் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பாகிஸ்தானை இட்டுச்செல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய - பாக்., இடையே பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் அல்லது 'பங்கர்' எனப்படும் பதுங்குக்குழிக்குள் தஞ்சம் அடைந்திருக்கலாம் என பேச்சு அடிபடுகிறது.

கடந்த சில நாட்களாக அவர் பொதுவெளியில் தோன்றாமல் மறைந்திருப்பதால் சமூக வலைதளங்களில், அவரை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

இந்தியாவுடன் போர் வரும் என்ற பயத்தில், அவர் தனது குடும்பத்தினரை பிரிட்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதேபோல், ராணுவ உயர் அதிகாரிகள் பலரும், சிறப்பு விமானங்களில் தங்கள் மனைவி, குழந்தைகளை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், பாக்., ராணுவ தளபதி குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நினைத்து, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், 'எக்ஸ்' வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில், அபோதாபாத்தில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லுாரி விழாவில் ஜெனரல் அசிம் முனீர், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் பங்கேற்றுள்ளதாகவும், புதிதாக ராணுவ பணிக்கு தேர்வாகியுள்ள வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. படம் எடுக்கப்பட்ட தேதியையும் வெளியிட்டுள்ளது.

ஆனால், உண்மையில் அந்த தேதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தானா என பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.


மொத்தத்தில், பாகிஸ்தானில், 'போர் ஜுரம்' படுவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல, போரை எதிர்கொள்ள வேண்டிய ராணுவத்தினரும் நடுநடுங்கி போய்விட்டனர்.

Advertisement