மாற்றுத்திறனாளி மனைவியை துாக்கி வந்து கலெக்டரிடம் மனு

மதுரை: ''ஆணவக் கொலையில் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும்'' எனக்கூறி மாற்றுத்திறனாளி பெண் கணவருடன் வந்து கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தார்.

மதுரை ஹார்விபட்டி சிவசுப்ரமணியன் மனைவி முத்துஅருளி. பிறவியிலேயே இடுப்புக்குக் கீழ் கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி. எங்கு சென்றாலும் அவரை கணவர் துாக்கிச் செல்கிறார். நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

முத்து அருளி கூறியதாவது: கணவர் குடும்பத்தினரால் ஆணவக் கொலை ஆபத்து உள்ளது என முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன்.

இதுபற்றி விசாரித்த திருநகர் போலீசார் முறையாக விசாரிக்காமல் விசாரணையை முடிக்கும் வகையில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்துகின்றனர். எனது கணவரிடம் பெற்ற நகை, பணம் எதையும் இதுவரை அவர்கள் திருப்பித்தரவில்லை. எங்களை காப்பாற்றி, நகை, பணத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் எனக் கோரினோம் என்றார்.

கணவர் சிவசுப்ரமணியன் கூறியதாவது: கப்பலுார் சிப்காட் கம்பெனி ஒன்றில் பொறியாளராக உள்ளேன். நண்பரின் சகோதரியை பத்தாண்டுகளுக்கு முன் காதலித்து மணந்தேன். ஒரு மகன் உள்ளான்.

மூன்று சக்கர சைக்கிள் எதுவும் பயன்படுத்த இயலாது என்பதால் நானே முத்து அருளியை துாக்கி வருகிறேன். அவரை முதலில் ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத்தினர், பின்னர் மாற்றுத் திறனாளி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஏற்கவில்லை.

எங்கள் குடும்பத்தினர் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்தோம் என்றார்.

மாற்றுத்திறனாளி மனைவி முத்து அருளியை மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு துாக்கி வந்த கணவர் சிவசுப்ரமணியன்.

Advertisement