மாவட்டம் முழுவதும் மது விற்பனை தாராளம்: மாதம் தோறும் கவனிப்பால் போலீசார் மவுனம்

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்ட முழுவதும் டாஸ்மார்க் கடைகளை தவிர குக்கிராமங்களில் கூட திருட்டுத்தனமாக மது விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.

மாவட்டத்தில் நிலக்கோட்டை, கொடைக்கானல், ஆத்துார், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களில் கிராமங்களில் திருட்டு மது விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. மாதம்தோறும் போலீசாருக்கு மாமூல் சென்று விடுவதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டும் ஓரிரு நாட்கள் அந்தப் பகுதியில் மது விற்பது நிறுத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் துவங்கி விடுகிறது.

இந்த திருட்டு மது விற்பனையில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டு இருப்பதால் உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் சென்று விடுகிறது. போலீசார் மாமூலை வாங்கிக் கொண்டு சும்மா இருந்து விடுகின்றனர். இதனால் மது விற்பனை அதிகரித்து கிராமங்களில் கூட குடும்ப பிரச்னைகள் தலை துாக்குவதால், பெண்கள் பல இடங்களில் திருட்டு மது விற்பனையை தீவிரமாக தடுக்க துவங்கி உள்ளனர். சமீபத்தில் கொடைக்கானல் கோம்பைப்பட்டியில் பெண்களே மது பாட்டில்களை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.இதே நிலை தொடர்ந்தால் கிராமங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிக அளவில் ஏற்படும்.

.......

தடை செய்யலாம்

ஆட்சிக்கு வரும் முன்பாக தி.மு.க., படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றனர். ஆனால் குக் கிராமங்களில் கூட பெட்டிக்கடையை போன்று திருட்டுத்தனமாக மது விற்பனையை அக்கட்சியினரே நடத்தி வருகின்றனர். இதனால் பெரிதளவில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள பார்களை தடை செய்ய வேண்டும்.

ஜவகர்,தே.மு.தி.க., மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர், வத்தலக்குண்டு.

Advertisement