7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 7 பேர் பலியாயினர். இதனால் பலியானவர்களின் மைலோடு கிராமே சோகத்தில் மூழ்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மைலோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் 68. கட்டட மேஸ்திரி. இவர் திருநெல்வேலி அருகே டக்கரம்மாள்புரத்தில் வசித்தார். இவரது மகன் ஜோபர்ட் 40. திருச்சியில் வங்கி ஒன்றில் பணிபுரிந்தார். விடுமுறையில் ஜோபர்ட் மனைவி அமுதா 35, மகள்கள் ஜோபினா 8, ஜோகனா 8, மகன் ஜோகன் 2, ஆகியோருடன் திருநெல்வேலி தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்க்ரெட் மேரி 60, மற்றும் ஜோபர்ட் குடும்பத்தினர் 7 பேரும் சொந்த ஊரான தக்கலை சென்று விட்டு மாலை காரில் திருநெல்வேலி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தனிஸ்லாஸ் ஓட்டினார்.
திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலை நாங்குநேரி தெற்கே தளபதி சமுத்திரம் கீழூர் பகுதியில் தனிஸ்லாஸ் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலியில் இருந்து கார் ஒன்று நாகர்கோவில் சென்றது. திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் 36, அந்த காரை ஓட்டினார். அந்த காரில் மாரியப்பனின் மனைவி அன்பரசி 32, மகன்கள் பிரவீன் 10, அஸ்வின் 8 மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணவேணி 40, மகள் பிரியதர்ஷினி 20, மகன் சுபிசந்தோஷ் 18, மற்றும் உறவினர் அக்சயா தேவி, பெரியவர் மில்கிஸ் 60, ஆகியோரும் பயணித்தனர்.
நேற்று முன் தினம் மாலை 4:30 மணியளவில் தளபதி சுமுத்திரம் கீழூர் அருகே மாரியப்பனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் வந்து கொண்டிருந்த தனிஸ்லாஸ் கார் மீது நடுவில் மோதியது.
இதில் அந்த காரில் பயணித்த தனிஸ்லாஸ், அவரது மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகிய 6 பேரும் பலியாயினர். மற்றொரு பேத்தி ஜோகனா 8, நாகர்கோவிலில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். மற்றொரு காரிலிருந்த மில்கிஸ் 60, பலியானார்.
மாரியப்பன் ஓட்டிய காரில் 9 பேர் இருந்துள்ளனர். முன் சீட்டில் இடது ஓரத்தில் மில்கிஸ், நடுவில் ஒரு சிறுவனும் இருந்துள்ளனர்.
சிறுவன் இருந்ததால் கார் ஓட்ட மாரியப்பன் நெருக்கடியில் சிரமப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்புற சீட்டில் டிரைவர் உட்பட மூன்று பேர் இருந்ததை நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
அதிக பயணிகளுடன் சென்ற மாரியப்பன் அருகிலேயே நெருக்கடியாக சிறுவனையும் உட்கார வைத்துக்கொண்டு கார் ஓட்டியது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.




மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு