ரயில்வே நர்சிங் கண்காணிப்பாளர் தேர்வு தாலி, பூணுால் அகற்ற சோமண்ணா தடை

பெங்களூரு: ரயில்வே நர்சிங் கண்காணிப்பாளர் தேர்வில் தாலி, பூணுால் அகற்றக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சி.இ.டி., எனும் பொது நுழைவுத் தேர்வு மையத்திற்கு வந்த மாணவரின் பூணுாலை அகற்றும்படி அதிகாரிகள் கூறினர். இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரயில்வே துறையில் நர்சிங் கண்காணிப்பாளர் தேர்வு, நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

இத்தேர்வு தொடர்பாக ரயில்வே துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள், தாலி, பூணுால் உட்பட மத நம்பிக்கை அடையாளங்களை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம், அகில கர்நாடக பிராமணர் மஹா சபையினர், பா.ஜ., - எம்.பி., கேப்டன் பிரிஜேஷ் சவுடா ஆகியோர் தெரிவித்தனர்.

அவரும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விஷயத்தை கூறினார். உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சோமண்ணாவுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சோமண்ணா வெளியிட்டுள்ள அறிக்கை:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் நர்சிங் கண்காணிப்பாளர் தேர்வு, இம்மாதம் 28ம் தேதி துவங்கி 29, 30ம் தேதிகளில் நடக்கிறது.

ஹால் டிக்கெட்டில் பல கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் தாலி, பூணுாலை அகற்றும்படி குறிப்பிட்டிருந்ததை எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பிராமண மஹா சபையினர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதிகாரிகளுடன் பேசி, பூணுால், தாலியை அகற்றக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தைரியமாக தேர்வு எழுதலாம்; குழப்பம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான் பா.ஜ.,வின் முகம். அவர்கள் ஒன்றை சொல்வர்; மற்றொன்றை செய்வர். மத நம்பிக்கை அடையாளங்களை தேர்வு மைய அதிகாரிகள் பரிசோதிக்கலாம். ஆனால், அதை அகற்றும்படி கூறுவது சரியல்ல.

- சிவகுமார், துணை முதல்வர்

Advertisement