மெட்ரோ ரயிலில் சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ.500 அபராதம்

பெங்களூரு: மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, தான் கொண்டு சென்ற உணவை சாப்பிட்ட பெண்ணுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரின் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவு, சிற்றுண்டி சாப்பிடுவது, குளிர்பானங்கள் குடிப்பதற்கு தடை உள்ளது.

புகை பிடிப்பது, பான் மசாலா, குட்கா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள், நிலையங்களில் துாய்மையை கடைப்பிடிக்கும் நோக்கில், இத்தகைய விதிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அமல்படுத்தி உள்ளது.

விதிமீறல்



ஆனால், சிலர் விதிகளை மீறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயிலில் குட்கா போட்ட நபரின் வீடியோ பரவியது. அவருக்கு மெட்ரோ அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதற்கிடையே, இம்மாதம் 26ம் தேதி, மாதவாரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மாகடி சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பயணம் செய்த பெண், தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டார்.

இதை பார்த்த சக பயணி ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

வீடியோவை கவனித்த மெட்ரோ அதிகாரிகள், கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். அவர் அன்றாடம் பயணிப்பவர் என்பது தெரிந்தது.

அவர் மீண்டும் மெட்ரோ நிலையத்துக்கு வந்தால், அபராதம் விதிக்கும்படி பாதுகாப்பு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்; ஊழியர்களும் கண்காணித்து வந்தனர்.

சாப்பிட்டது ஏன்?



நைஸ் சாலை சந்திப்பில் உள்ள, மாதவாரா மெட்ரோ நிலையத்தில் அப்பெண் நுழைந்தபோது, அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு ஊழியர், மெட்ரோ ரயிலில் விதியை மீறி சாப்பிட்டதை விவரித்து, 500 ரூபாய் அபராதம் வசூலித்தார்.

இதுகுறித்து மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

தேவையின்றி கழிவுகள் உருவாகி, துாய்மை பாழாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த விதிமுறை வகுக்கப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும், எந்த இடையூறும் இல்லாமல், ஆனந்தமாக பயணம் செய்யும் சூழ்நிலை உருவாக்குவது எங்களின் நோக்கம். அனைத்து பயணியரும் மெட்ரோ ரயில், நிலையங்களில் துாய்மையை காப்பாற்ற வேண்டும்.

பயணியரின் பாதுகாப்பு, சுகாதாரம், சுகமான பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மெட்ரோ நிறுவனம் கடும் விதிமுறைகளை செயல்படுத்துகிறது. இதற்கு பயணியர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement