தங்கவயல் செக்போஸ்ட்!

* 'நிழல்' அட்டகாசம்!

முனிசி.,யின் உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிய இன்னும் ஆறேழு மாதங்களே இருக்குது. அதற்குள் வசதி வாய்ப்புகள் உள்ளவங்க கிடைத்ததை சுருட்ட வேகம் காட்டி வராங்க.

ஒருத்தரிடம் இ- - பட்டா செய்து தருவதாக 'நிழல்' கவுன்சிலர் ஒருத்தரிடம் பணம் கொடுத்தாராம். ஆனால் வேலை நடந்த பாடில்லையாம். பணம் கொடுத்து ஏமாந்தவர், மன உளைச்சலுக்கு ஆளாகி காணாமலேயே போனார். அவரது உடல், பிணமாக வீட்டுக்கு வந்தது.

பணம் ஏமாற்றியவரோ, தனக்கு பெரியவங்க பக்கபலம் இருப்பதால், தெனாவட்டாக மிரட்டுறாராம். இதனால, அந்த முக்கிய நபருங்க மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே 'கமிஷன்' ஏஜென்ட்டுங்க மூலமா தான், அவங்களுக்கு பெயர் ரிப்பேர் ஆகி வருவதாக வட்டார தகவல்கள் உள்ளன.

-------

* வெறுப்பு மந்திரி!

கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருப்பவர், கோலார் மாவட்டத்துக்காரரே இல்லை; இதனால இந்த மாவட்டத்தின் விபரம் தெரியாதவராக தான் இருக்காராம். இதுவரைக்கும் இவர் கட்டுப்பாட்டில் இருக்கிற ஆறு தொகுதிகளின் மக்களை சந்தித்து குறை கேட்டதாக தெரியல.

கோல்டு சிட்டி தாலுகாவில் 523 ஏக்கர் அரசு நிலம் மாயமானதே, இதன் பேரில் இந்த மந்திரி எடுத்த நடவடிக்கை என்ன? மாலுார் கல்குவாரி, கோல்டு சிட்டி கிரானைட்ஸ், கூட்டுறவு வங்கி கொள்ளை, பால் உற்பத்தி கூட்டுறவு சங்க ஊழல், வனப் பகுதி அரசு நிலம் அபகரிப்பு என மாவட்டத்தில் ஊழலின் வளர்ச்சி தான் பெருசா பேசப்படுது.

இது தவிர, மாவட்ட மந்திரி நிறைவேத்தின திட்டம் எதுவும் காணோம். முதல்வரின் 'செல்ல பிள்ளை' என்ற ஒரே தகுதியில், கோலாரின் மாவட்ட மந்திரி கிரீடம் சூடிக்கொண்டிருக்கிறார். கோலார் மாவட்டத்தில் பல பிரச்னைகள் இருக்குது.

பெமலிடம் பயன்படுத்தாமல் இருந்த 967 ஏக்கர் நிலத்தை ஸ்டேட் திரும்ப பெற்றது போல், கோல்டு மைனிங் பயன்படுத்தாமல் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பதை பெறாமல் வேடிக்கை பார்க்கலாமா? கோலார் மாவட்ட பெருமையை காப்பாற்ற இவரோட செயல்பாடு ஜீரோவாகவே இருக்குது. இவரு எப்போ ஹீரோவாக மாறுவது.

-------

* ஒருநாள் கூத்து!

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க, ஒருவார காலம் இருக்கும்போது, மைனிங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு வீட்டு உடமை சான்றிதழ் வழங்க, விழா நடத்தினாங்க. சென்ட்ரல் மைனிங் துறை மந்திரியையும் வரவழைத்தாங்க. தடபுடல் ஏற்பாட்டில் 1,000 பேருக்கு மட்டுமே வழங்கினாங்க. மத்தவங்களுக்கு வழங்கலை.

தேர்தல் நடந்து முடிந்து 10 மாதம் ஆகியும் கூட, அப்பணியை முடிக்கல. என்ன காரணத்துக்காக வழங்காமல் வைத்திருக்காங்களோ? அந்த சர்ட்டிபிகேட்டில அப்போதைய மந்திரி, எம்.பி., படத்தை அச்சடித்து வழங்கினதா சொல்றாங்க. தற்போது அவர் எம்.பி.,யாக இல்லை. தற்போதுள்ளவரின் படமும் இல்லாமல் எப்படி வழங்க சம்மதிப்பாங்க?

சொத்து பத்திரம் போல, சர்ட்டிபிகேட் குளறுபடியால் மைனிங் கஜானாவில் துாங்குது. ஏற்கனவே சான்றிதழ் பெற்றவங்க முனிசி.,யில் பட்டா பதிவு செய்ய அணுகினால், அதுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு வரணுமுன்னு நிராகரிக்கிறாங்க.

அழுகுற பிள்ளைக்கு வாழை பழத்தை காட்டுவது போல, சர்ட்டிபிகேட் நாடகம் நடத்தினாங்க. ஒரு நாள் கூத்தாக அது முடிந்து போயிருக்கு. வீடுகள் சொந்தம் ஆவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேணுமோ?

------

* ஆபத்தான நோய்!

முனிசி., கவுன்சிலுக்கு ஆறு மாதத்திற்குள், எலக் ஷன் வரப்போகுது. இதற்காக போட்டியிட விருப்பப்படுவோர் வார்டு தோறும் பிரச்சாரம் செய்ய தொடங்கிட்டாங்க. இப்பவே நல உதவிகள் வழங்கி வராங்க. வீடுதோறும் மூட்டை அரிசி, ஆடைகள், பணம் பட்டுவாடா செய்றாங்க. பேனர்களில் தங்களின் படங்களை போட்டு விளம்பர படுத்துறாங்க.

குறைந்தபட்சம் ஒரு வார்டில் எட்டு பேர் போட்டிக்கு தயாராகிட்டாங்க. இதில் சில கட்சித் தலைவர்கள், தங்கள் ஆதரவாளர்களை எப்படி சமாளிப்பது என்ற கோணத்தில் சிந்திக்கிறாங்க.

கடந்த எலக் ஷனில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவங்க இம்முறை ஜெயித்தாக வேண்டும் என்று வார்டுகளில் சுழலுறாங்க.

இதுவரை பொதுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதவர்கள், தேர்தல் ஆசையில் நடமாடுறாங்க. பணத்தை வாரி இரைக்கிறாங்க. தேர்தல் அறிவிப்பு வரும் முன்னே 'ஓட்டுக்கு நோட்டு' நோய் பரவிவிட்டது.

***

Advertisement