குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு விதிமீறல் கட்டடங்களுக்கு எச்சரிக்கை

பெங்களூரு: கட்டடம் கட்டும்போது, விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பெங்களூரு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க பெஸ்காம், குடிநீர் வடிகால் வாரியம் முன்வந்துள்ளன. 'விதிகளை மீறினால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என, அவை எச்சரித்துள்ளன.

அடையாளம்



பெங்களூரின் பாபுசா பாளையாவில், புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று, 2024 அக்டோபர் 22ம் தேதி, திடீரென இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் பலியாகினர். சம்பந்தப்பட்ட கட்டடத்தை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விதிகளை மீறி கட்டப்படுவதும், பணிகள் தரமாக இல்லாததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து விதிகளை மீறிய கட்டடங்கள் மீது, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. புதிதாக கட்டப்படும் கட்டடங்கள் விதிகளின்படி கட்டப்படுகிறதா என்பதை, மாநகராட்சி குழுவினர் ஆய்வு செய்கின்றனர். அபாயத்தில் உள்ள கட்டடங்களை அடையாளம் காண்கின்றனர்.

பாபுசா பாளையா சம்பவத்தை தீவிரமாக கருதிய லோக் ஆயுக்தாவும், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, நிரந்தரமாக மின் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டது. இதன்படி பெஸ்காமுக்கு, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பெஸ்காம் நடவடிக்கை எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றம்



இந்நிலையில், உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள், உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு 12 அம்சங்கள் கொண்ட உத்தரவு பிறப்பித்தது.

'கட்டுமான கட்டடங்கள், ஓ.சி., எனும் குடியேறுவதற்கான சான்றிதழ் பெறுவது கட்டாயம். இந்த சான்றிதழ் இல்லாமல் குடிநீர், மின்சாரம் உட்பட எந்த வசதிகளையும் வழங்கக் கூடாது.

இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது, உள்ளாட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

இதன்படி, பெஸ்காமும், பெங்களூரு குடிநீர் வாரியமும் எச்சரித்துள்ளன.

இதுகுறித்து, குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர கூறியதாவது:

வீடுகள் அல்லது கட்டடங்களுக்கு, குடிநீர் இணைப்பு வேண்டுமானால், பெங்களூரு மாநகராட்சியிடம் ஓ.சி., சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயம். இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

மாநகராட்சி சட்டத்தை மீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்கள் மீது, மாநகராட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறலான கட்டடங்களை அடையாளம் காட்டினால், அத்தகைய கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்க தயாராக இருக்கிறோம்.

ஒருவேளை அதை செய்ய மாநகராட்சி தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம். கட்டடங்களுக்கு ஓ.சி., பெறும்படி நாங்கள் கட்டட உரிமையாளர்களிடம் அறிவுறுத்துவோம். சான்றிதழ் பெறாவிட்டால், குடிநீர் இணைப்பு அளிக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement