மனு அளிக்க வந்த மூதாட்டி பஸ்சை மறித்ததால் பரபரப்பு

கோவை:
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண், ரோட்டின் குறுக்கே ஓடிச் சென்று, பஸ்சை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

ஏராளமானோர் தங்களது புகார்களை வழங்கி வந்தனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் அருகே நின்றிருந்த பெண் ஒருவர், திடீரென ரோட்டின் குறுக்கே ஓடிச்சென்று பஸ்சை தடுத்து நிறுத்தினார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் கவனித்து, அவரை மீட்டு அழைத்து வந்தனர்.

விசாரணையில், கோவை சூலுார் அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த நிர்மலா, 57 எனத் தெரிந்தது. தனது தாயின் பெயரில் உள்ள சொத்தில், தனக்கு பங்கு தர மறுப்பதாக தெரிவித்தார்.

இதற்காக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், மனு அளிக்க வந்த பெண், பஸ்சை மறித்தது தெரிந்தது. போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement