பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த 22 பேர் கைது

குவஹாத்தி: ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணியர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு, பாகிஸ்தான் தான் காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாமில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இதுவரை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக 22 பேரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், 'இந்திய மண்ணில் வாழ்ந்துகொண்டு பாகிஸ்தானை ஆதரித்துப் பேசிய துரோகிகள் 22 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement