பெயர் எழுதுவதில் பாரபட்சம்; பா.ம.க.,வினர் போராட்டம்

விருத்தாசலம்; பயணியர் நிழற்குடையில், பெயர் எழுதுவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, பா.ம.க., வினர், பெயர் எழுதும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த 2006 -07ம் ஆண்டு, அப்போதைய பா.ம.க., எம்.பி., பொன்னுசாமி நிதியில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இதனால், நிழற்குடையில், எம்.பி., பொன்னுசாமி பெயர் பெரிதாக எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, 2024-25ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில், பயணியர் நிழற்குடை புனரமைக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை பெரிதாக எழுதியுள்ளனர்.

பயணியர் நிழற்குடையை அமைக்க காரணமாக இருந்த முன்னாள் எம்.பி., பொன்னுசாமி பெயரை பாரபட்சத்துடன் எழுதுவதாக கூறி, பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், நிர்வாகிகள் நேற்று, பெயர் பலகை எழுதும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா, பா.ம.க., வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையேற்று அனைவரும் கலந்துச் சென்றனர். இது தொடர்பாக பா.ம.க., வினர் டி.எஸ்.பி., பாலக்கிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.

Advertisement