போலீசாரின் நெடுங்கால கோரிக்கை: அனுமதி மறுக்கும் தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: தமிழக போலீசாரின் நெடுங்கால கோரிக்கையான ஊழியர் சங்கம் அமைப்பதற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சகோதர-சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்புப் பிரிவு, மதுவிலக்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, கடலோரக் காவல், புலனாய்வு, உளவுத்துறை எனப் பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண் காவலர்களும், 20 ஆயிரம் பெண் காவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

உயிர் காக்கும் மருத்துவர்கள், அறிவைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வரை அனைவரும் சங்கம் அமைக்கவும் அதன் மூலம் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெறவும் வாய்ப்பு உள்ள நிலையில் காவல்துறைக்கு மட்டும் அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படுவது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதாகும். காவல்துறையில் பணியாற்றுபவர்களும் நம்மைப்போல உயிரும், உணர்வும், ரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள்தான் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணர்ந்துகொள்ள போகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கையை ஒருமித்த குரலில் அரசிடம் முன் வைத்து உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement