பதிலடி தருமா சென்னை * இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ஷ்ரேயசின் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை அணி, இதுவரை பங்கேற்ற 9 போட்டியில் 2ல் மட்டும் வென்று, 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 5 போட்டியில் பெரியளவு வெற்றி பெற்றாலும், 'பிளே ஆப்' வாய்ப்பு உறுதியில்லை. எனினும் இளம் வீரர்கள் ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷித் அணிக்கு நல்ல துவக்கம் தர முயற்சிக்க வேண்டும். 'மிடில் ஆர்டரில்' புதிய வரவு டிவால்ட் பிரவிஸ் நம்பிக்கை தருகிறார். 43 வயது கேப்டன் தோனி, சரியான வெற்றிக் கூட்டணியை கண்டறிய முடியாமல் தடுமாறுவது பலவீனம்.
வாய்ப்பு எப்படி
பிரிமியர் தொடரில் பஞ்சாப் அணி இதுவரை கோப்பை வென்றது இல்லை. 2014ல் பைனலுக்கு சென்றது தான் அதிகபட்சம். அடுத்து ஒருமுறை கூட லீக் சுற்றை தாண்டவில்லை. தற்போது ஷ்ரேயஸ் தலைமையில், பாண்டிங் பயிற்சியில் சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை பங்கேற்ற 9 போட்டியில் 5ல் வென்று (3 தோல்வி, 1 முடிவில்லை) 11 புள்ளியுடன் 5வது இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 5 போட்டியில் 4ல் வென்றால் 2014க்குப் பின் முதன் முறையாக 'பிளே ஆப்' செல்லலாம். இளம் வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் உதவ காத்திருக்கின்றனர்.
இரு அணிகள் மோதிய முதல் லீக் போட்டியில் (முல்லன்புர்) சென்னை அணி 18 ரன்னில் தோற்றது. இதற்கு இன்று சென்னை அணி பதிலடி தரலாம்.

Advertisement