உளவியல் ஆலோசனையுடன் 3,800 கர்ப்பிணிகள் கண்காணிப்பு

கோவை, ; கோவை மாவட்ட தாய் - சேய் கண்காணிப்பு மையத்தின் கீழ் தற்போது, 3,800 கர்ப்பிணிகள் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மையம் சார்பில், கர்ப்பிணிகளில், 'ஹை ரிஸ்க் மதர்' பட்டியலில் உள்ளவர்களை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதாவது, கர்ப்பிணிகளில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு மற்றும் பிற நோய் பாதிப்புகள் உள்ளவர்கள், பட்டியல் மாவட்ட அளவில் தொகுக்கப்படுகிறது.

இச்சூழலில், பிரசவத்திற்கு முன்னும், பின்னும் பிரசவ கால மனச்சோர்வுக்கு பெண்கள் ஆளாகின்றனர். ஒரு சில பெண்கள், இதுபோன்ற சூழல்களில் குழந்தைகளை காயப்படுத்துவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாய்- சேய் கண்காணிப்பு மையத்தில், கர்ப்பிணிகளுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''இம்மையத்தில் நான்கு பேர் தொடர்ந்து கர்ப்பிணிகளை கண்காணித்து வருகின்றனர். பிரசவத்திற்கு 7 நாள் முன், 7 நாள் பின் என்ற அடிப்படையில், போனில் அழைத்து பேசி, கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர். உளவியல் சார்ந்தும் கவுன்சிலிங் கொடுக்கின்றனர். உளவியல் ரீதியான பிரச்னை சிலரிடமே காண முடிகிறது. இருப்பினும் உரிய ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement