விளையாட்டு போட்டியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை : விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவிகளை பாதுகாக்க வழிகாட்டுதல் சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்தது.

தென்மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் சிறுமி படித்தார். அவர் கபடி வீராங்கனை. தேசிய போட்டி தேர்வுக்கான மாநில போட்டிக்கு தேர்வானார். வெளியூரில் நடந்த போட்டிக்கு அவரை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்றார். தனது உறவினர் வீட்டில் இருவரும் தங்க உடற்கல்வி ஆசிரியர் திட்டமிட்டார்.

அதை மாற்றி சிறுமியை ஒரு லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கு பதிந்தனர்.

போக்சோ சட்டப்படி உடற்கல்வி ஆசிரியருக்கு கீழமை நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

2024 மார்ச்19 ல் விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். நேற்று நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார்.

அரசு வழக்கறிஞர்: விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவிகளை வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி ஆசிரியைகள் அழைத்துச் செல்ல வேண்டும். மாணவிகள் தங்கும் இடங்களில் உடன் உடற்கல்வி ஆசிரியைகள் தங்க வேண்டும். மாணவிகளை போட்டிகளுக்கு அழைத்துச் செல்வோரின் அலைபேசி எண் உள்ளிட்ட சில விபரங்களை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்படும் மாணவிகள் புகார் செய்ய வசதிகள் செய்ய வேண்டும். விளையாட்டுத்துறையின் அனுமதியின்றி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எந்த ஒரு போட்டியையும் நடத்தக்கூடாது என பாதுகாப்புக் கருதி விளையாட்டுத்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தார்.

நீதிபதி: உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வழிகாட்டுதல் சுற்றறிக்கை வெளியிட்டதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலர், தலைமை குற்றவியல் வழக்கறிஞரை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது.

இவ்விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்து தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்த விசாரணை ஜூலை 21க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement