மதுரையில் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலி உரிமையாளர் உட்பட இருவர் கைது

மதுரை : மதுரை கே.கே.நகரில் ஸ்ரீ கிண்டர் கார்டன் பள்ளி தண்ணீர் தொட்டியில் 3 வயது சிறுமி ஆருத்ரா தவறி விழுந்து இறந்தார். கவனக்குறைவாக இருந்ததாக பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி 48, உதவியாளர் வைரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியைகள், உதவியாளர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை நடக்கிறது. பள்ளிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட கோர்ட் எதிரேயுள்ள கே.கே. நகர் விநாயகர் நகரில் இப்பள்ளி பல ஆண்டுகளாக அனுமதி பெற்று இயங்கி வருகிறது.
கே.ஜி., வகுப்புகள் மற்றும் 'டேக் கேர்' மையமாக செயல்பட்டு வரும் நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தன. இதில் மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த பேராசிரியர் அமுதன் என்பவர் தனது 3 வயது மகள் ஆருத்ராவை பேச்சு பயிற்சிக்காக இங்கு சேர்த்தார்.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆருத்ரா மாயமானார். ஒருமணி நேரம் கழித்து அவரை ஆசிரியர்களும், உதவியாளர்களும் தேடினர். பள்ளி கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் ஆருத்ரா மூழ்கி கிடந்தார்.
உடனடியாக அவரை காலை 10:50 மணிக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆனால் சிறுமி பலியானார். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்து இருவரும் கதறி அழுதனர். சிறுமியின் தாயார் சிவஆனந்தி மயக்கமடைந்தார்.
தகவல் தெரிவிக்கவில்லை
நிருபர்களிடம் தந்தை அமுதன் கூறுகையில் ''பள்ளி தரப்பில் இருந்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒருமணி நேரத்திற்கு பிறகு இறந்துதான் மருத்துவமனைக்கு பாப்பாவை கொண்டு வந்துள்ளனர். எப்படி இறந்தது, எப்போது இறந்தது என தெரியவில்லை'' என்றார்.
இதற்கிடையே பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி, உதவியாளர் வைரமணியை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். கவனக்குறைவாக இருந்த ஆசிரியைகள் மேனகா, ஐஸ்வர்யா, ஜெயபிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று மதியம் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, ஆர்.டி.ஓ., ஷாலினி முன்னிலையில் பள்ளிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
39 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை
மதுரையில் மொத்தம் 64 பிளே ஸ்கூல்கள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளுக்கு தனியார் பள்ளி டி.இ.ஓ., சார்பில் அனுமதி அங்கீகாரம் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 25 பள்ளிகளுக்கு மட்டுமே உரிய அங்கீகாரம் உள்ளன என டி.இ.ஓ., சுதாகர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் பள்ளி 2023ல் துவங்கி 2026 வரை அங்கீகாரம் பெற்றுள்ளது.
பொதுவாக இதுபோன்ற பள்ளிகளில் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட திறந்தவெளிப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் தவறி விழுந்துவிடாத அளவிற்கு சற்று உயரமாகவும், கம்பி வேலி அல்லது கிரில் கேட் மூலம் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு அம்சம் இருந்தாலும் கேட் பூட்டு போட்டு மூடப்படாமல் இருந்துள்ளது.
கடும் நடவடிக்கை
சி.இ.ஓ., ரேணுகா கூறியதாவது: மாவட்டத்தில் ஏப்.,24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறி சம்பந்தப்பட்ட பள்ளி செயல்பட்டுள்ளது. 60 பேர் படிக்கும் அந்த பள்ளியில், 30 பேருக்கு மட்டும் கோடைகால பயிற்சிகள் நடத்தப்பட்டன. அதற்கான வருகை பதிவேடும் வைத்துள்ளனர். நேற்று 20 மாணவர்கள் வந்திருந்தனர். கோடைகாலத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்கக்கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: மதுரையில் அனைத்து அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை நாட்களில் கண்டிப்பாக செயல்படக்கூடாது. கோடைகால பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்பு, மாலைநேர வகுப்பு என எவ்வித நிகழ்வுகளுக்காகவும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது. மீறி பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார்.
மேலும்
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி
-
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்
-
மோடியுடன் நிற்கிறோம் எம்.பி.பாட்டீல் தடாலடி
-
வாரிய தலைவர் பதவிகள் எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்