மே 3ம் தேதி வரை வெப்பநிலை உயரும்

சென்னை: 'தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மே, 3ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில், அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரில், 7; ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், 6; திருவாடானையில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மே, 5 வரை மிதமான மழை தொடரலாம். சில இடங்களில், மே, 3 வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியசாக பதிவாகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 நகரங்களில் சதம்



நேற்று மாலை நிலவரப்படி, கரூர் மாவட்டம் கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

Advertisement