2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு

மாண்டியா: தன் இரண்டு குழந்தைகளுடன் மாயமான தந்தை, 13 நாட்களுக்கு பின் கால்வாயில் காரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கபட்டணா பகுதியில் கே.ஆர்.எஸ்., அணை தண்ணீர் செல்லும் விஸ்வேஸ்வரய்யா கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது.
இதனால் கால்வாயில், ஒரு கார் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், கே.ஆர்.எஸ்., போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம், காரை எடுத்தனர்.
காரினுள் ஒரு ஆண் மற்றும் இரு குழந்தைகள் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவங்கினர்.
இதில் உயிரிழந்தது, மைசூரு கே.ஆர்., நகரின் ஹெப்பாலைச் சேர்ந்த குமாரசாமி, 38, அவரது மகன் அத்வத், 8, மகள் அக் ஷரா, 3, என்பதும் இவர்கள் காணாமல் போனதாக பெங்களூரு மாதநாயகனஹள்ளி போலீசில் புகார் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
குமாரசாமி, பெங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 16ம் தேதி, மைசூரில் தன் தந்தையை பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு, மகன் அத்வத், மகள் அக் ஷரா, ஆகியோருடன் காரில் சென்றுள்ளார்.
அன்றிரவு 7:00 மணிக்கு கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் கார்டனுக்கு அவர்கள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் மகனும், பேரப்பிள்ளைகளும் வராததால், மகனுக்கு தந்தை போன் செய்துள்ளார்.
ஆனால், போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது தெரிந்து, குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.
தங்களுக்கு தெரிந்த இடங்களில் தேடினர். எந்த இடத்திலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி, பெங்களூரு மாதநாயகனஹள்ளி போலீசில் புகார் செய்தார்.
பெங்களூரின் தனியார் நிறுவனத்தில் குமாரசாமி பணியாற்றி வந்துள்ளார்; கை நிறைய சம்பளமும் பெற்று வந்தார். சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்துள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அதிலிருந்து விலகினார்.
குமாரசாமி காணாமல் போன நாளில் இருந்து, அவரது நண்பர்களிடம் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் ஒழுங்காக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைத்து தகவல்களையும் திரட்டி கொலையா, தற்கொலையா, விபத்தா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு