பறிக்கப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டது சாதனையா; முதல்வரின் 'மேஜிக்' அறிவிப்புகளால் ஆசிரியர்கள் அதிருப்தி

2

மதுரை : முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'மேஜிக்' அறிவிப்புகள் ஏற்கனவே ஆசிரியர், அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்டவை தான். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சட்டசபையில் 110 விதியின்கீழ் முதல்வர் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் நடைமுறை 2020 வரை நடைமுறையில் இருந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அறிவிப்பது நடைமுறை. பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுவதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதி இதற்காக ஒதுக்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தான் திருமண முன்பணம் வழங்குவதிலும் நீடித்தது. இவ்வாறாக மொத்தமுள்ள 9ல், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலத்தையும் அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு மட்டுமே புதிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

மற்ற அறிவிப்புகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவை தான். அதாவது பறிக்கப்பட்ட சலுகைகளை பல போராட்டங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை நிலை என ஆசிரியர்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

மிஞ்சியது ஏமாற்றம் தான்



ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவது என்பது தான்.

10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வரப்போவதற்காக 2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க., உறுதியளித்ததால் நம்பிக்கை ஏற்பட்டது. அதுபோல் 14 ஆண்டுகளுக்கும் மேலாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள சம்பள முரண்பாடு களையப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர், 'டெட்' தேர்வு எழுதியவர்களுக்கு நடத்தப்படும் நியமனத் தேர்வு ரத்து செய்யப்படும், 'அவுட்சோர்ஸ்' முறையிலான நியமன முறை ரத்து செய்யப்படும் என ஆசிரியர்கள் நலன்சார்ந்த, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதிகளை ஒன்றை கூட கண்டுகொள்ளவில்லை.


பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லை. தி.மு.க., ஆட்சியின் கடைசி பட்ஜெட்டிலும் ஆசிரியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். இதன் எதிரொலி வரும் சட்டசபை தேர்தலில் வெளிப்படும் என்றனர்.

Advertisement