விரிவாக்க பகுதியில் பயன்பாடற்ற மின் இணைப்பு 'லைனை' மாத்தி கொடுங்க... காத்திருக்கும் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கப்படுமா

மக்கள் தொகை பெருக பெருக, நகரங்கள் விரிவடைந்து புதிய குடியிருப்புகள் முளைவிடுகின்றன. மதுரை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் இந்நிலைமை உள்ளது. விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும்போது, உள்ளூர் திட்டக்குழுமம் மூலம் அனுமதி பெற்று பயன்படுத்துவோர் விவசாய நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்து, மின்இணைப்புகளை முறையாக மாற்றம் செய்வர்.

அதேசமயம் விவசாய நிலங்களை மாற்றம் செய்யாமல் வீடுகட்டியும், வீட்டுமனைகளாக விற்போரும் பலர் உள்ளனர்.

அந்நிலங்களில் சாகுபடி மறைந்து, பயன்பாடே இல்லாததால் மின்உபயோகமும் நின்றுவிடும். அந்த இணைப்பு தொடர்ந்து மின்வாரிய பயன்பாட்டில் இருப்பதாகவே கணக்கில் இருக்கும்.

மின்கட்டணம் செலுத்த தேவையில்லாத நிலையில் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. அவற்றை கணக்கெடுத்து நிரந்தர துண்டிப்பு செய்தால், மின்இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கலாம்.

விழிப்புணர்வு இல்லை



மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சாகுபடியே இல்லாத நிலையில் மின்இணைப்பு தேவையற்றதாகி விடுகிறது. அவற்றை முறையாக சரண்டர் செய்யும் விழிப்புணர்வு பலரிடம் இல்லை.

இதுபோன்று ஒரு கோட்டத்திற்கு 50 முதல் 100 இணைப்புகள் பயன்பாடின்றி உள்ளன. மாநில அளவில் பல ஆயிரங்களில் இதுபோல இருக்கும். அவற்றை துண்டிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அவற்றால் மின்இழப்பு பாதிப்பு இல்லாததால் நடவடிக்கை எடுப்பதில்லை. அவை மின்வாரிய பதிவேட்டில் பயன்பாட்டில் உள்ளதாகவே இருக்கும். இதனால் மின்திட்டமிடலின் போது அவற்றையும் கருத்தில் கொண்டே திட்டமிடுகின்றனர்.

விவசாய இணைப்புக்கு காத்திருப்போருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. எனவே இதனை துணடிப்பு செய்துதான் காத்திருப்போருக்கு வழங்க வேண்டும் என்பதில்லை. அதேசமயம் இந்த பயன்பாடற்ற இணைப்புகளின் உரிமைதாரர் அவரது பெயரில் வேறு எந்த பகுதிக்கும் மின்இணைப்பைப் மாற்ற முடியும். அப்படி இருக்கும்போது அதனை நிரந்தரமாக துண்டித்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கலாம் என்றனர்.

Advertisement