இருளில் மூழ்கும் திண்டுக்கல் நகர் நுழைவுப்பகுதிகள்

திண்டுக்கல்; திண்டுக்கல் நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலுமே விளக்குகள் இல்லாமல் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு இணைப்பு பாலமாக உள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென எந்த போக்குவரத்தாக இருந்தாலும் திண்டுக்கல் வழியேதான் செல்ல வேண்டும். இச்சூழலில் திண்டுக்கல் நகருக்குள் நுழைவுப்பகுதிகளாகஉள்ள திண்டுக்கல் - - மதுரை ரோடு, திருச்சி ரோடு, வத்தலகுண்டு ரோடு என அனைத்து பகுதிகளிலுமே போதிய வெளிச்சம் இல்லை.

குறிப்பாக மதுரைரோடு சவேரியார் பாளையம் தொடங்கி தோமையார்புரம் வரை ஒன்றரை கி.மீ., பகுதியில் ரோட்டோர இருபுறம் விளக்குகள் இல்லாததால் இருள் சூழந்து உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். திருச்சி ரோட்டில் ஆயுதப்படை மைதானத்திலிருந்து நேருஜி நகர் மேம்பாலம் வரை போதிய வெளிச்சம் இல்லை. இதனால் குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். இந்த இருளை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது.

சில நேரங்களில் ரோட்டோரங்கள் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி விடுகிறது. இரவு 7:00 மணிக்குமேல் இந்த பகுதிகளில் செல்வதற்கே பெண்கள், முதியவர்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.இருளின் காரணமாக மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும் வாடிக்கையாகி வருகிறது.

ரோட்டோரத்தில் நடந்து செல்வோர் மீதும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.இது போன்ற இடங்களில் தெருவிளக்குகள் ஏற்படுத்த உள்ளாட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

முகம் சுளிக்கும் நிலை



சதீஷ்குமார், முன்னாள் நகர தலைவர், பா.ஜ.,: திண்டுக்கல்: இருளை பயன்படுத்தி இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகள் உட்பட பலவற்றையும் கொட்டி செல்கின்றனர். இதனால் ரோட்டோரத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு வெளியூர் மக்கள் முகம் சுளிக்கும் நிலை திண்டுக்கல்லிற்கு ஏற்படுகிறது. வாகன விபத்துகளும் நடக்கிறது. வேகத்தடைகள் இருப்பது கூட தெரியவில்லை.

நடவடிக்கை எடுங்க



முரளி, என்.ஜி.ஓ., காலனி: நகரின் நுழைவு வாயில்களே இருள் சூழ்ந்துதான் காணப்படுகிறது. விளக்குகள் அமைத்து போதிய வழிகாட்டுதல் பலகைகள் வைக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அவ்வப்போது போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும். சிசிடிவிக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும்.

தீர்வு: ரோட்டின் இருபுறமும் தெரு விளக்குள், முக்கிய இடங்கள், சந்திப்புகளில் ஹைமாஸ் லைட் அமைக்க வேண்டும். விளக்குள் எரிந்தாலே பாதி பிரச்னைகள் முடிந்து விடும். இதோடு நகரின் நுழைவுப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான சூழலை உருவாக்க இருளை அகற்றி விளக்கை ஏற்றினாலே போதுமானது.

Advertisement