பாசியம்மன் கோயில் புனரமைக்கபடுமா

திருவாடானை; தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சோழ மன்னர்களால் கட்டபட்ட பாசியம்மன் கோயில் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது. கோயில் முழுவதும் கருங்கற்களாலும் அதற்கு மேல்தளம் செங்கல் சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மன் சிலை இருந்தது. சிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. சிலையை திருடியவர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற போது போலீசார் கைப்பற்றினர்.

சிலை தற்போது திருவாடானை சார்நிலை கருவூலம் பொறுப்பில் உள்ளது. இக் கோயிலில் சுவாமி கும்பிடுவது சம்பந்தமாக பாசிபட்டினம் மற்றும் கலியநகரி கிராம மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோயிலில் புனரமைப்பு பணிகள் தடைபட்டு கோயில் மேல் பகுதிகளில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் கோயிலை புனரமைக்கக் கோரி பொது நல வழக்கு தொடர்ந்தார். விசாரணை செய்த நீதிபதிகள் கோயிலை ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நான்கு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்.24 ல் உத்தரவிட்டனர்.

இதனால் கோயில் புனரமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர்.

Advertisement