ஆசிரியர்கள் போராட்டத்திற்கு காரைக்கால் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு

புதுச்சேரி; அரசு உதவி பெறும் தனியார் பள்ளி சங்கங்களின் சம்மேளனம் சார்பில், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி 7 வது நாளாக காத்திருப்பு போராட்டம் கல்வித்துறை வளாகத்தில் நடந்தது.
போராட்டத்திற்கு காரைக்கால் பிரதேச ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். பொருளாளர் மயில்வாகணன் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி சம்மேளன கவுரவ தலைவர் வின்சன்ட் ராஜ், பொதுச் செயலாளர் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்திற்கு காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எம்.எல். ஏ.,க்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோர் கல்வித் துறை இயக்குனரை சந்தித்து பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தனர். இயக்குனர் விரைவில் முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து தனியார் பள்ளி சம்மேளன நிர்வாகிகளை முதல்வரிடம் அழைத்துச் சென்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் இவர்களை பணி நிரந்தரம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.
முதல்வர் இயக்குனரிடம் இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுப்பதாக கூறினார்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஆசிரியர்கள், காரைக்கால், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.