ஆசிரியரிடம் வழிப்பறி; 3 பேர் அதிரடி கைது

நெல்லிக்குப்பம்; அரசுப் பள்ளி ஆசிரியரிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, மன்னச்சநல்லுாரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்,25; கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் தனது பைக்கில் கடலுார் அடுத்த கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, குடி போதையில் வந்த 3 பேர் வழிமறித்து தாக்கி, 1 சவரன் நகை, மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். நேற்று காலை மோகன்ராஜின் மொபைல் போன் சிக்னல் கோண்டூர் ரயில்வே தண்டவாளம் அருகே இருப்பதை அறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், கடலுார், வடுகபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் மகன் மணிகண்டன்,25; ஏழுமலை மகன் சங்கர்,26; சதாசிவம் மகன் கோபி,29; என்றும், மோகன்ராஜியிடம் வழிப்பறி செய்ததையும் ஒப்புக் கொண்டனர். உடன், போலீசார், 3 பேரையும் கைது செய்து, 1 சவரன் செயின், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement