குற்ற வழக்குகளில் தொடர்பு: 9 வக்கீல்கள் பணிபுரிய தடை
சென்னை :பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றது, போக்சோ வழக்கு போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடைய, ஒன்பது வழக்கறிஞர்கள் பணிபுரிய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் கீதா செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பு:
போக்சோ வழக்கில், நீதிமன்ற காவலில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்; விபசார வழக்கில் சிறையில் உள்ள நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் விஜயானந்த்; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்ற வழக்கில், சிறையில் உள்ள திருவண்ணாமலையை சேர்ந்த கஜேந்திரன்; கொலை வழக்கில் சிறையில் உள்ள திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ரமேஷ்கன்ட், கணேஷ்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரன்; இழப்பீடு தொகையில் முறைகேடு செய்த, பெரம்பலுாரை சேர்ந்த அறிவழகன்; குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான கரூரை சேர்ந்த ராஜா; கொலை வழக்கில் தொடர்புடைய, சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர், அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில், வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.