கனடா தேர்தலில் லிபரல் கட்சி அமோகம் மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி

ஒட்டாவா,: கனடா பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் மற்றும் காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை களம் கண்டன.

மொத்தம், 343 இடங்கள் உடைய கனடா பார்லிமென்டில் பெரும்பான்மைக்கு, 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பியர் பாய்லிவேர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளது.

ஒட்டாவா தொகுதியில் போட்டியிட்ட பியர் பாய்லிவேர், ஓட்டு எண்ணிக்கையில் மிகவும் பின் தங்கியுள்ளதால், அவர் தோல்வி அடையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காவிட்டாலும், பல சிறிய கட்சிகளின் ஆதரவுடன் லிபரல் கட்சி நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது. இதனால், அக்கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின், அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைய வலியுறுத்தினார்.

அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கனடா கவர்னர் என்றே அழைத்தார். கனடாவுக்கு அதிக வரி விதித்தார். இதை தொடர்ந்து லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிந்தது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்தனர். இறுதியில், பிரதமர் ட்ரூடோவும் ராஜினாமா செய்தார்.

அரசியலுக்கு துளியும் தொடர்பில்லாத தொழிலதிபரும், பொருளாதார வல்லுநருமான மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, கனடா பிரதமராக பொறுப்பேற்றார்.

பார்லி.,யை கலைத்து தேர்தல் அறிவித்தார். பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தன் காரசார பேச்சினால் வறுத்தெடுத்தார். இது, கனடா மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. பொருளாதார நிபுணரான கார்னி நாட்டை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையை அளித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இருந்த கோபம், மார்க் கார்னிக்கு ஓட்டுகளாக மாறியது. தேர்தலுக்கு முன்னரே ஓட்டளிக்கும், 'அட்வான்ஸ்டு ஓட்டிங்' நடைமுறை கனடாவில் உள்ளது.

இதை பயன்படுத்தி, 73 லட்சம் கனடா மக்கள் தேர்தலுக்கு முன்னரே ஓட்டுகளை பதிவு செய்தனர்.

நேற்று முன்தினம் தேர்தல் முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், லிபரல் கட்சிக்கு ஆதரவாகவே முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த கட்சி, 168 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் மலரும் உறவு

ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது, அவரது காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக, இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது, மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்கும் பட்சத்தில், உறவு மீண்டும் வலுப்பெறும் என கூறப்படுகிறது.'ஒரே சிந்தனை உடைய நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தவும், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நான் பிரதமரானால் நிச்சயம் அதை நிறைவேற்றுவேன்' என, மார்க் கார்னி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். எனவே இவரது வெற்றி, இந்தியா - கனடா உறவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.இதற்கிடையே, மார்க் கார்னியின் தேர்தல் வெற்றிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



காலிஸ்தான் கட்சி காலி

காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக கட்சி, இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த கட்சிக்கு, 12 இடங்கள் கூட கிடைக்காததால் தேசிய அந்தஸ்தை கூட இழக்க நேரிடும் என தெரிகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பர்னபி மத்திய தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சியின் தலைவர் ஜக்தீப் சிங், லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து, கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

Advertisement