மகனை அரசியலில் பிரபலமாக்க அமைச்சர் 'பிளான்'

பொதுவாக மூத்த அரசியல் தலைவர்கள், தங்களுக்கு செல்வாக்கு இருக்கும்போதே, தங்களின் வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர விரும்புவர். முக்கியமான பதவியிலும் அமர்த்துவர். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியும் விதிவிலக்கு அல்ல. தன் மகன் ராகுலை அரசியலில் ஈடுபடுத்துகிறார்.
கர்நாடக அரசின் பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பவர் சதீஷ் ஜார்கிஹோளி. தன்னை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் பார்க்க, தன் ஆதரவாளர்கள் விரும்புவதாக அவ்வப்போது கூறி வருகிறார்.
ஆனால் முதல்வர் பதவிக்கு சிவகுமார், சித்தராமையா இடையே ஏற்கனவே 'பனிப்போர்' நடக்கிறது. எனவே, 'முதல்வர் பதவியே வேண்டாம்' என, சதீஷ் ஜார்கிஹோளி ஒதுங்கி விட்டார்.
ஆர்வம்
தன் வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வருவதில், ஆர்வம் காட்டுகிறார். கட்சியில் தனக்கு செல்வாக்கு இருக்கும்போதே, வாரிசுகளை முக்கியமான பதவியில் அமர்த்த விரும்புகிறார்.
தன் மகள் பிரியங்காவை 2024 லோக்சபா தேர்தலில் பெலகாவியின் சிக்கோடி தொகுதியில் களமிறக்கி, வெற்றி பெற வைத்தார்.
இளம் எம்.பி.,யான பிரியங்கா, லோக்சபாவில் திறமையாக பேசுகிறார்; கேள்வி எழுப்புகிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிரியங்கா, அரசியலில் நிதானமாக வளர்ந்து வருகிறார். தற்போது மகன் ராகுலை அரசியலுக்கு அழைத்து வர, சதீஷ் ஜார்கிஹோளி விரும்புகிறார். ராகுல் அவ்வளவாக அரசியலில் தென்பட்டது இல்லை.
தன் தந்தையுடன் எப்போதாவது தொகுதி நிகழ்ச்சிகள், தேர்தல் பிரசாரத்தில் தென்படுவார். இப்போது மகனை தீவிர அரசியலில் ஈடுபடுத்த, சதீஷ் ஜார்கிஹோளி விரும்புகிறார்.
முக்கிய பதவி
சமீபத்தில் மாநில காங்கிரஸ் பிரிவு செயலர் பதவிக்கு நடந்த தேர்தலில், ராகுல் வெற்றி பெற்றார். கட்சியில் முக்கிமான பதவியில் அமர்ந்துள்ளார். மகனை தீவிர அரசியலில் ஈடுபடுத்தி, இன்னும் பெரிய பதவிக்கு கொண்டு செல்ல, சதீஷ் ஜார்கிஹோளி விரும்புகிறார்.
மகளை எம்.பி.,யாக்கிய சதீஷ் ஜார்கிஹோளி, மகனை எம்.எல்.ஏ.,வாக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு மகனை இப்போதிருந்தே தயாராக்குகிறார்.
பெலகாவியின் ஏதாவது ஒரு தொகுதியில் மகனுக்கு சீட் பெறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மகனை களமிறக்க சதீஷ் ஜார்கிஹோளி முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
- நமது நிருபர் -