வாரிய தலைவர் பதவிகள் எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும் வாரிய தலைவர் பதவி, முழுமையாக நிரப்பப்படவில்லை. அப்பதவியை எதிர்பார்த்து இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியில், அமைச்சர் பதவி கொடுக்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளின் வாரிய தலைவர் பதவி வழங்கப்படுகிறது. இது அமைச்சர் பதவிக்கு இணையாக கருதப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், இளையோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இதனால் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக பசவராஜ் ராயரெட்டி, பி.ஆர்.பாட்டீல், யஷ்வந்தராய கவுடா பாட்டீல் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக பேசினர்.

சுதாரித்துக் கொண்ட முதல்வர் சித்தராமையா குரல் கொடுத்தவர்களுக்கு மட்டும், வாரிய தலைவர் பதவியை வழங்கி சமாதானம் செய்தார். மற்றவர்களுக்கு விரைவில் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

பதவிக்கு பட்டியலை தேர்வு செய்யும் பொறுப்பு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் கொடுக்கப்பட்டது. அவரும் அறிக்கை சமர்ப்பித்து விட்டார். ஆனால் பதவிகளை நிரப்புதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இடையில் ஒருமித்த கருத்து இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தங்கள் ஆதரவாளர்களுக்கே பதவி வாங்கிக் கொடுப்பதில் இவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். பதவி யாருக்கும் எட்டாக்கனியாக உள்ளதால், எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பா.ஜ., ஆட்சியில் இருந்த போதும், இதே மாதிரி தான் வாரிய தலைவர் பதவியை நிரப்ப இழுத்தடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement