மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி

ராஜாஜிநகர்: சாலையை கடக்க முயன்றபோது, லாரி மோதியதில் மாநகராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜம்மா, 51. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்தார்.

ராஜாஜிநகர் சிவநகர் 'வெஸ்ட் ஆப் கார்ட் ரோடு' பகுதியில், நேற்று அவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. காலை 6:30 மணிக்கு சிவநகர் பகுதியில் உள்ள, மாநகராட்சி அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலை சிக்னலில், சிவப்பு நிற விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. இதனால் சாலையை கடக்க முயன்றார். சிக்னலில் திடீரென பச்சை நிற விளக்கு மாறியது. இந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி, சரோஜம்மா மீது மோதியது.

படுகாயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விஜயநகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement