நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: தலைவர்களின் கருத்து என்ன?

சென்னை: நாட்டில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், அதிமுக பொதுச்செயலர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
சமூக நீதியில் உறுதிபூண்டுள்ள மத்திய அரசு, இன்று வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், சமூக சமத்துவம் மற்றும் ஒவ்வொரு பிரிவின் உரிமைகளுக்கும் வலுவான அர்ப்பணிப்புக்கான செய்தி வழங்கப்பட்டுள்ளது.
பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்
ஜாதி வாரிகணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த கணக்கெடுப்பு மூலம், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும், இதன் மூலம் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த முடியும்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்
தமிழக மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அ.தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.
தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
ராமதாஸ் வரவேற்பு
இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.
தேசிய அளவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் நேரில் வலியுறுத்தினேன். மூன்று முறை கடிதம் எழுதினேன். லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அன்புமணி பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
பா.ம.க.வின் முயற்சியால் கடந்த மூன்று முறை னாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமாகி கடைசி நேரத்தில் கை நழுவிய நிலையில், இப்போது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும். இதற்கு பிரதமர் மோடிக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறயுள்ளார்.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் தொடர் அழுத்தத்தின் விளைவாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, ராகுலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சண்முகம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என்று கூறி நியாயமான கோரிக்கையை நிராகரித்து வந்த மத்திய அரசு, இன்று நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் தொடர் வற்புறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி இது.
அமமுக பொதுச் செயலர் தினகரன்
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி , மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங், மத்திய அமைச்சர் சுகந்த மஜூம்தார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் வாசன், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
கொண்டாட்டம்
பீஹார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான தேஜஸ்வி, மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து தொண்டர்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடினார்.






