கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355 ஆக நிர்ணயம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதுடில்லி:2025-26 பருவத்திற்கு கரும்புக்கான நியாயமான விலை குவிண்டாலுக்கு 4.41 சதவீதம் உயர்த்தி ரூ.355 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி:
கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355 ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரை சத்து 10.25 சதவீதம் உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.355 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சத்து 9.5 சதவீதம் உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.329.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் நேரடியாகப் பணிபுரியும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த உத்தரவால், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட முக்கிய கரும்பு உற்பத்தி மாநிலங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.