ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொரு குடிமகனும் இருப்பர்: அசாம் முதல்வர்

குவஹாத்தி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் உறுதியாக நிற்பார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
கடந்த ஏப்.22 ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தருவது குறித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில்,கோல்பாராவில் பஞ்சாயத்து தேர்தல் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய முதல்வர் பிஸ்வா சர்மா, பாகிஸ்தான் உடன் போர் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அடுத்த இரண்டு மாதங்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும், இந்த வடகிழக்கு மாநில மக்கள் சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வழங்குவார்கள்.
கடந்த வாரம் பஹல்காமில் அப்பாவி மக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எவ்வாறு கொன்றார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதிகள் உலகின் கடைசி வரை துரத்தப்படுவார்கள், நமது ஆயுதப் படைகள் அவர்களுக்கு நீதி வழங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
