மே மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலை: வானிலை மையம் கணிப்பு

புதுடில்லி: மே மாதத்தில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை காட்டிலும் அதிகமான வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாடு முழுவதும் வெப்ப நிலை அதிகரி்த்த நிலையில் உள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடை வெயில் வரவிருக்கிறது. இந்நிலையில், மே மாத வெயில் நிலவரம் எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:

மே மாதம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், கங்கை நதி மேற்கு வங்கத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை நாட்கள், இயல்பை விட ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை அதிகமாக இருக்கும்.

குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, அருகிலுள்ள தெலுங்கானா மற்றும் வடக்கு கர்நாடகாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.

Advertisement