பாரம்பரிய நம்பிக்கைகளை புரிந்துகொள்வதன் நன்மைகள்: காஞ்சி சங்கராச்சாரியார் அருளுரை

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தீட்சை வழங்கி, ஹிந்தி, தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆற்றிய அருளுரை:
இன்று நடந்த இந்த மகத்தான, பிரமாண்டமான, விமர்சையான இந்த நிகழ்ச்சி, பரம்பரை பாரம்பரியத்தை, பரம்பரை நம்பிக்கைகளை நாம் தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும், அதன்படி நடப்பதற்கும் வழிகாட்டுகிறது. நாட்டின் முக்கியமான பீடமாக விளங்கக்கூடிய காஞ்சி காமகோடி பீடத்தின் தியாக பரம்பரையின் அடையாளம் இது.
தியாக பரம்பரையின் சிகரமாக, தியாக பரம்பரையின் உண்மையான உருவமாக, இன்று நம்மிடையே அந்த குடும்பத்திலிருந்து, இவர் இந்த பக்கம் வந்திருந்தாலும் இந்த காஞ்சி காமகோடி குடும்பத்திலே சேர்ந்திருக்கிறார். ஆகவே இந்த அரிய நிகழ்ச்சியிலே நம்முடைய பெரியவர்களுடைய ஆசிர்வாதத்துடன், இவரை இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி என்கிற பெயரில் அழைக்கலாம். அனைவரும் அந்த குருபரம்பரையை வணங்கி புருஷார்தத்தை பெறுவதற்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
விரதம்
சத்தியத்தை அதாவது பிரம்ம பரமாத்மாவை விரதமாக கொண்டு பேருக்காகவோ, புகழுக்காகவோ படாடோபத்துக்காகவோ மேற்கொள்ளாமல், ஆத்மார்த்தமாக அந்த சத்தியவிரதத்தை மேற்கொண்டு மூன்று வேதங்களையும் கற்று அந்த வேத பரம்பரையை பிரசாரம் செய்வதற்காக நம்முடைய பெரியவர்கள் பாடுபட்டு ஒரு நல்லவழியை காண்பித்து இருக்கின்றனர். காஞ்சி தலத்தின் வரமும் நமக்கு தேவை. அந்த வரங்கள் ஞானம், ஐஸ்வர்யம், சந்தானமாக, வித்தையாக, நல்ல சுபாவமாகவும் இருக்கலாம்.
மொத்தத்திலே வரம் என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று. அதிலே அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் நல்லுணர்வு, அனைவருக்கும் நல்ல உள்ளம், இதை அளிக்கக்கூடிய அன்னவரம் சத்யநாராயண சுவாமிகளுடைய அனுக்ரஹத்தையும் மனதிலே கொண்டு சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி என்பதாக இருக்கும்.
பக்தர்களுக்கு இந்த அட்சய திரிதியை தினத்திலே 17 வருடங்களுக்கு பிறகு இந்த புதவார யுக்த ரோகிணி நட்சத்திர திரிதியை என்பது அமைந்து இருக்கிறது. மறுபடியும் 27 வருடங்களுக்கு பிறகுதான் இந்த புதவாரமும் ரோகிணியும் இணைந்த அட்சயத் திரிதியையாக வர இருக்கிறது.
இந்த ஞான பரம்பரையானது தியாக பரம்பரையானது சேவை பரம்பரையானது மேலும் மேலும் தேசத்திற்கும் தர்மத்திற்கும் சமுதாயத்திற்கும் உலகத்திலே அமைதி ஏற்படுவதற்கும் அத்வைத தத்துவம் பிரசாரம் ஆவதற்கும் காரணமாக அமையும்.
அனைவருக்கும் தேவையான ஒன்று புண்ணியம்; அந்த புண்ணியத்தை அளிக்கக்கூடிய தவ வலிமையோடு கூடிய இந்த அனுக்ரஹ சக்தியோடு கூடிய பெரியவாளுடைய அனுக்ரஹத்தோடு புது பெரியவாளுடைய அனுக்ரஹத்தோடு மேன்மேலும் சிறக்கும்.
'சத்யம் ஜகன் மித்யா ஜீவோ பிரம்மைவ நாபர' என்ற உபநிஷத்தில் கூறப்பட்ட (தத்துவத்தை) காஞ்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள "காஞ்சி காமகோடி பீடத்தின் எந்த குருபரம்பரை தொடர்கிறதோ அந்த குருபரம்பரையில் குருவும் மற்றும் என் குருவுமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யர் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்யர். இவர்கள் அனைவரும் உலகத்தை மேன்மைபடுத்துவதற்காகவும், உலகத்திற்கு நன்மை செய்வதற்காகவும், தர்மத்தை காப்பதற்காகவும் பாடுபட்டனர்.
ஆதி சங்கரரில் ஆரம்பித்து சுரேஷ்வராசார்யர், ஸர்வக்ஞாத்ம சரஸ்வதி ஸ்வாமிகள், அதை தொடர்ந்து எந்த பரம்பரையானது நம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று எந்த பரம்பரையானது தொடர்கிறதோ அந்த பரம்பரையில் இன்று நம் சவுபாக்கியத்தாலும், அவர்கள் அனுக்ரஹத்தினாலும் தான் காரியம் நன்கு நடக்கிறது. சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற பெயரால் இவரை அனைத்து பக்தர்களும் வணங்கி ஆசி பெற வேண்டும்.
தினமும் ஆச்சார்யரின் பாதங்களை மனதில் நினைத்திருத்தல் வேண்டும் என்று பரம்பரையை அனைவரும் போற்றுங்கள். அந்த ஆசியினால் அனைவரும் நல்ல பரம்பரையை அடைவார்கள் என்று கூறிய சந்திரமவுலீஸ்வரரை நினைத்து கொண்டு அனைவருக்கும் ஆசிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.


மேலும்
-
சாம் கரண் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சமூக பொருளாதாரம் வலுப்பெறும்: அண்ணாமலை
-
ஜாதி வாரி கணக்கெடுப்பு; மத்திய அரசுக்கு உதவ தயார் : ராகுல் பேட்டி
-
இந்தியா போர் தொடுக்கும் அச்சம்: கடும் சரிவை சந்தித்தது பாக்., பங்குச்சந்தை!
-
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு; தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: சொல்கிறார் முதல்வர்