திருமழிசை பேரூராட்சி தலைவர் ஆக்கிரமித்த நிலம் மீட்பு

திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில், பேருந்து நிலையம் அருகே, 439/1பி என்ற சர்வே எண்ணில், பேரூராட்சிக்கு சொந்தமான, 8 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை, பேரூராட்சி தி.மு.க., தலைவர் மகாதேவன் என்பவர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தார்.
இந்த நிலத்தை மீட்க கோரி, 2023ம் ஆண்டு, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த டி.பால்ராஜ் என்பவர் புகார் அளித்தார்.
இதையடுத்து, 2023, ஜூலை 4ல், பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி தலைமையிலான வருவாய் துறையினர், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர்.
அப்போது, அந்த இடம் பேரூராட்சிக்கு சொந்தமானது எனவும், அதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய் எனவும், வருவாய் துறையினர் தெரிவித்தனர். ஆனால், நிலத்தை மீட்கும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் அதே இடத்தில் கட்டுமான பணி நடப்பதாக, பூந்தமல்லி வட்டாட்சியருக்கு, மீண்டும் புகார் வந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் வருவாய் துறையினர், திருமழிசை பேரூராட்சி தலைவர் ஆக்கிரமித்த இடத்திற்கு நேற்று முன்தினம் சென்றனர்.
அப்போ அங்கு வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் மகாதேவன், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட நிலத்திற்கு தன்னிடம் பட்டா இருப்பதாக கூறி, அதை காண்பித்தார்.
ஆனால் வட்டாட்சியர் சரஸ்வதி, 'அது போலி பட்டா' எனக்கூறியதோடு, பேரூராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலத்தை மீட்டு, எல்லைக் கற்கள் மற்றும் கம்பி வேலி அமைத்தார்.